
காலை ஒரு ஆறு மணியிலிருந்தே கடுகடுவென எரிந்து விழுந்தார் காளையன். ஒரு பக்கம் தனது கணவரின் திட்டை வாங்கிக்கொண்டு மறுபக்கத்தில் பரபரப்புடன் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தாள் மூக்காயி பாட்டி.
"7.30க்கி வந்துருவான் ஓம் பேரன்,இப்பத்தேன் ஆட்டுக்குக் கொள வெட்டப் போற" என்று கத்திக் கொண்டிருந்தவரை, "விடிஞ்சதுல இருந்து சும்மாவே அந்தச் சேர்ல ஒக்காந்துகிட்டு, என்ன நீ இப்புடி கத்திக்கிட்டு கெடக்குற ஒரு வேலையாச்சும் பாக்குறியா" என்று பேசி வாயடைக்கச் செய்தாள். கையில் ஒரு கயிறு, ஒரு அரிவாளுடன் குளைப் பறிக்க விரைந்தாள் மூக்காயி.

மணி 7:20 ஐத் தாண்டியும் இன்னும் வீடு திரும்பாதவளைச் சில கடுஞ்சொல்லால் தன் பேரன் முன்பே திட்டினார் காளையன்."ஒங்க அம்மாச்சி இன்னும் அங்க வெட்டிக் கிழிச்சுக்கிட்டு இருக்காப் போல" இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வியர்க்க விறுவிறுக்கத் தலையில் குளையோடு வீட்டு வேலியினுள் நுழைந்தாள் மூக்காயி, மூக்காயியும் சளைத்தவள் அல்ல கணவர் பேசும் பேச்சுக்கு எதிர்ப்பேச்சைப் போட்டு வாயை அடைத்து விடுவாள். அன்றைய நாளும் அப்படித்தான் வாயை அடைத்தாள். அவசர அவசரமாகக் குளித்துவிட்டுச் சீலையைக் கட்டிக் கொண்டிருந்தவளைப் பார்த்து " ஒங்க ஆளுக வீட்டுக்குனா நீ மட்டுதே போவ, ஏன் எங்கள எல்லாம் பாத்தா ஆளுகளாதெரியலையா,என்னையெல்லாம் கூட்டிட்டுப் போகக்கூடாதா" என்று கேளியும் கடுப்பும் கொண்டவராய்க் கேட்டார் காளையன். அதற்கு மூக்காயியோ "ஒன்னயலாம் வச்சுக்கிட்டு எங்களால போர வார பக்கம்லாம் இழுத்துக்குட்டு திரிய முடியாது" . வயது 75 ஐ தாண்டியதாலும் பக்கவாதம் பிரச்சனையினாலும் மெதுவாக நடப்பதாலேயே காளையனை வெளியில் கூட்டிச் செல்லப் பயப்படுவாள் மூக்காயி. அன்றைக்கு இதற்காகத்தான் சண்டை நடந்து கொண்டுடிருந்தது இருவருக்கும்.
சிறிது நேரம் கழித்து அவரே "நீயே பத்தரமா போயிட்டு வா மூக்கு" என்று ஏமாந்த குரலில் கூறினார். மூக்காயியை சில சமயம் அவளது கணவர் மூக்கு ,மூக்கு என்று அழைப்பது வழக்கம். எப்படியோ எல்லாவற்றையும் சமாளித்துப் பேரனோடு வண்டியில் ஏறி உட்கார மணி 7.50ஆகிவிட்டது. மிகுந்த ஆவலோடும் கையில் தின்பண்டங்களோடும் தன் தந்தை ஊரான வெள்ளாளப்பட்டியை நோக்கிப் புறப்பட்டார்கள் பேரனும் பாட்டியும். மூக்காயிக்கு மூன்று அண்ணன்மார்கள் உண்டு, அதில் ஒருவர் காலம் சென்றுவிட்டார். மூத்த அண்ணன் சொத்துச் சண்டையால் யாரிடமும் பேச்சு வைத்துக் கொள்ளாமல் தன் மகள் வீட்டில் குடியேறிவிட்டார். மீதி இருக்கும் தன் தம்பியிடம் மட்டுமே பேச்சு வார்த்தை உண்டு மூக்காயிக்கு, தன் தம்பி வீட்டு சென்ட்ரிங் போடும் வழிபாட்டிற்கு தான் இப்போது சென்று கொண்டிருக்கிறாள் மூக்காயி. வயது 60 தாண்டியும் தன் சிறு வயதில் செய்த கூத்துகளை அப்படியே இப்பொழுது நடந்தது போல் அச்சு அசலாக தன் பேரனிடம் வழி நெடிகில் சொல்லிக் கொண்டே வந்தாள். இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே செல்லும் வழியில் ஒரு காட்டைக் காண்பித்து "இதுதான் பா விராலிக் காடு, நாங்க சின்ன வயசுல இங்குட்டு தான் ஆடு மாடு மேச்சுட்டு திரிவோம். அப்பெல்லாம் இங்கிட்டு விராலி செடியா கெடக்கும், இப்ப பாரு ஒரே தருசா கெடக்கு"என்று பல வர்ணனைகளைப் போட்டு பேசிக்கொண்டே வந்தாள். அதற்கேற்றார் போல் பேரனும் நிறைய கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வருவான். இப்படியே பேசிக் கொண்டு செல்லும்போது போகும் வழியில் ஒரு குளத்தைக் கண்டாள் மூக்காயி. உடனே வண்டியை நிறுத்த ஆணையிட்டாள். வண்டி நின்ற உடனேயேக் கால்களை மெல்ல மெல்ல வைத்து அந்த குளத்திற்குள் இறங்கினாள். அவள் பின்புறமாகவே பேரனும் கற்களில் தட்டி விழாமல் மெதுவாய் நடந்தான். இருவரும் ஒரு சமதள இடத்தில் நின்றார்கள் அப்போது பேரன் பாட்டியைப் பார்த்து "அம்மாச்சி இங்க எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க, இங்க என்ன இருக்கு பாக்குறதுக்கு, இந்த குளத்துல தண்ணி கூட இல்லயே" என்று தன் பாட்டியைத் திட்டினான். அவன் சொல்லி ஒரு நொடி தான் கிழக்கே ஒரு புதரைப் பார்த்துக் கண் கலங்கி நின்றாள். பின் தன் பேரன் பார்க்காத வண்ணம் கண்களைத் துடைத்துக் கொண்டு "இல்லப்பா இங்குட்டெல்லாம் வந்து ரொம்ப நாளாச்சு இல்ல, அதான் பாக்கணும்னு தோணுச்சு எங்க அம்மா, அண்ணெங்க, தம்பி அப்பறம் என்னைய எல்லாரையும் கூட்டிக்கிட்டுவந்துரும் குளிக்க இங்க" என்று புன்னகையுடன் தன் பேரனைப் பார்த்துச் சொன்னாள், அதற்கு பேரனோ "மணி 8.30 ஆகப்போகுது, சாமி இந்நேரம் கும்புடப் போயி இருப்பாங்க வாங்க போகத்துக்க" என்று நேரத்தைக் காரணம் காட்டி பாட்டியைக் கனவிற்குள் இருந்து மீட்டெடுத்தான்.

பேரனும் பாட்டியும் அந்த குளத்தில் இருந்து மேலேறி மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கினர். போகும் வழியில் மூக்காயி தன் சிறு வயது அரட்டைகளை வர்ணித்தத்தொனி இருக்கிறதே, அதை வைத்தே அவள் வாழ்ந்த காலத்திற்கே சென்று வந்துவிடலாம். ஒரு பக்கம் கூழ் கட்டிகளை திருடுவது என்ன, ஊமச்சிகளை பிறக்குவது என்ன, ஈசலை வறுத்து தின்பது என்ன, 1 ரூபாய்க்குக் குளை பறிக்கச் சென்றது என்ன, இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் கேட்டுக் கொண்டே வந்த பேரன் சில சமயம் ஆச்சரியத்தில் மூழ்கிவிடுவான். இப்படியே கதைக்கூத்துகளை பேசிக்கொண்டே ஒரு வழியாக போக வேண்டிய இடத்தை அடைந்தனர் இருவரும். மூக்காயியின் மீது மூக்காயியின் தம்பி குப்பனுக்கு ஏகப்பிரியம். தன் அக்கா வந்ததை உணர்ந்து மரியாதையும் மகிழ்ச்சியும் கலந்த குரலில் வரவேற்றார் குப்பன். தாய்வீடு வந்த மகிழ்ச்சியில் அங்கு நடக்கும் வேலைகளில் சிறிது மூக்காயியும் இழுத்துப் போட்டுச் செய்தாள்.

அப்புறம் என்ன ஒரே கேளியும் குதூகலமும் தான் அந்த வீட்டில். குப்பன் தான் செய்த சிறு வயது சேட்டைகளைத் தன் அக்காவின் தலைமையில் அனைவரிடமும் சொல்லிச் சிரித்தார். இதை எல்லாம் பார்த்தும் கேட்டும் இரசித்துக்கொண்டிருந்தப் பேரனின் சிந்தையில் தான் எத்தனை எத்தனைக் கற்பனை. "பேசாம அந்தக் காலத்திலேயே பிறந்திருக்கலாம்" என்று மனக்கோட்டையில் திளைத்துக் கொண்டிருந்தான். அந்த அளவிற்குக் கதை அவ்வளவு சுவாரசியமாக போகும், இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போதே மூக்காயியின் எண்ணம் அடிக்கடி அவளது வீட்டை நோக்கி சென்று வரும். "தண்ணிச்சோத்தபோட்டுட்டு வந்தேன், மாம்பழத்தை வெட்டி சாப்புட்டு இருப்பாரா, ஆட்டுக்கு கொளய மாத்தி வச்சிருப்பாரா". என்று பலவாறான சிந்தனைகள் அவளின் கண் முன் வந்து வந்து சென்றது. இப்படி எல்லாம் சிந்தனை இருக்கும்போது, தன் தம்பியின் பேச்சு தான் மீண்டும் அவளை வெள்ளாளப்பட்டியில் கொண்டு வந்து இறக்கும். அப்படி, இப்படி என்று பத்து மணிக்குத் தான் சாமி கும்பிடும் வேலை முடிந்தது. பத்து மணிக்கு முன்னிருந்தே பிரியாணி செய்யும் வேலை தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. வெகுதூரம் வந்தக் களைப்பினாலும், காலை உணவு உண்ணாமல் வந்ததாலும் பேரனும், பாட்டியும் காலை உணவை ஒரு புளிக்குழம்போடு முடித்துவிட்டு, சாணியால் முழுகப்பட்ட அந்த திண்ணையில் வந்து உட்கார்ந்தார்கள்.
உட்கார்ந்த சில நிமிடங்களிலேயே தன் பேரனைப் பார்த்து "மணி எத்தனை பா" என்று நேரத்தை வினவினாள் மூக்காயி. தன் பேரன் மணி 11:30 என்று சொன்ன உடனேயே மூக்காயி "ஐய ஐய மணி 11.30 ஆயிருச்சா, ஆட்ட வேற பாக்கணுமே, ஒங்க தாத்தா வேற கத்துவாரே" என்று பரபரப்புடன் பேசிய வண்ணம் தம்பியைத் தேட ஆரம்பித்தாள். இதைக் கண்ட குப்பனின் மனைவி "அண்ணி கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போங்களேன், நீங்க மட்டும் வந்தா ஒரு நாள் கூட இருக்க மாட்டிறிங்க, ஒங்களுக்கு ஆடு, மாடு தான பிரச்சன உங்க பெரிய மகள்ட போன் பண்ணி சொல்லுவோம் ,ஒரு நாள் பாத்துக்கட்டும்" என்று மூக்காயியை ஒரு நாள் நம் வீட்டில் இருக்க வைத்து விட வேண்டும் என்ற நோக்கோடு பேசினாள். "அட சும்மா இருங்க போயிட்டு இன்னொரு நாள் வர்றோம்"என்று மூக்காயி பதிலுக்கு வாதாடத் தொடங்கினாள். தம்பியின் மனைவிதான் இப்படி என்றால், தம்பி அதற்கு மேலே அக்காவைத் திட்ட ஆரம்பித்தார், "பிரியாணி இன்னும் ஒரு மணி நேரத்துல செஞ்சுறலாம் கா கொஞ்ச நேரம் இருங்க", என்று கடைசி முயற்சியாகக் கூடச் சொல்லிப் பார்த்தார். ஆனால் அதுவும் எடுபடவில்லை. கடைசியாக தன் அக்காவின் வழிக்கே வந்து விட்டார் குப்பன். பேரனும், பாட்டியும் ஒரு வழியாக வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கியப் பயணத்தைத் தொடங்கினர். போகும் வழியில் பேரன் தன் பாட்டியைத் திட்டிக் கொண்டே வந்தான். "அம்மாச்சி ஒரு நாளு உங்க பொறந்த ஊர்ல இருந்துட்டு வந்தா என்ன, ஆட்ட வேணா நான் போய் பாத்துக்குவேன் ல"
"அதெல்லாம் சரிப்பட்டு வருமா பா அந்த சின்ன குட்டி என்ன காங்கலனா மேயவே மேயாது". இதைக் கேட்ட பேரனுக்கோ, "பொறந்த வீட்ட விட நம் அம்மாச்சிக்கி ஒரு ஆட்டுக்குட்டி மேல ஒரு படி அதிக பாசம் வந்தது ஏன்?" என்று மின்னல் வேகத்தைப் போன்று சட்டென எண்ணம் தட்டி சென்றது. எண்ணம் இப்படிப் போய்க்கொண்டு இருக்கையிலேயே தான் முன்பு கடந்து சென்ற குளத்தைக் கவனிக்கத் தவறிவிட்டான் பேரன். ஆனால் மூக்காயி கவனிக்காமல் இல்லை. அந்த பாழடைந்த உரை கிணற்றைப் புதரின் இலைதளைகள் மறைத்து வைத்திருந்ததையும், அதன் பின்னால் தன் அம்மா, அண்ணன்மார்களின் சிரிப்புச் சத்தத்தையும் கண்டும், கேட்டும் கண்ணீர் துளி கண்களில் மழ்கி நின்றவரேப் பயணித்தாள்.

இருவரும் வீட்டை அடைய மணி 1:30 ஆகிவிட்டது. தன் அம்மாச்சியை அவளின் வீட்டில் இறக்கிவிட்டு வேகமாக தன் வீட்டிற்கு வந்த மணி, அங்கு பரபரப்பாக வேலை செய்துக் கொண்டிருந்த தன் அம்மாவைப் பார்த்து, "அம்மா இந்த அம்மாச்சிக்கி அவுக பொறந்த வீட்ட விட அவுக ஆட்டுக்குட்டிக்குத் தான் அதிக பாசம் ,எதுனாலஇப்படி?" என்றுக் கூறினான். இந்தக் கேள்வியைக் கேட்ட அமுதா புன்முறுவலோடு "அத நாளைக்கி ஒங்க அக்காவ கட்டிக் கொடுத்ததுக்கப்பரம் அதுகிட்டேயே கேளுடா" என்று கூறினாள். இதைக் கேட்ட மணியோ ஒன்னும் புரியாதவனாய் தலையைச் சொரிந்த வண்ணம் தன் அம்மாச்சிக் கொடுத்து விட்ட அதிரசத்தை இருசித்த வண்ணம் தன் அக்காவை ஏறிட்டான்.
முற்றும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கருத்துகளை இங்குப் பதிவிடவும்.
அடுத்த வாரம் வேறொருக் கதையின் மூலம் உங்களைச் சந்திக்கும் வரை உங்கள்..
கண்ணன் அ
